கடன் தவணை தொகையை செலுத்த வற்புறுத்தல்: தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போட முயன்ற அரசியல் கட்சியினர்
கடன் தவணை தொகையை செலுத்த வற்புறுத்திய தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போட அரசியல் கட்சியினர் முயன்றனர்.
புதுக்கோட்டை,
கடன் தவணை தொகையை செலுத்த வற்புறுத்திய தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போட அரசியல் கட்சியினர் முயன்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் தவணை தொகைகளை செலுத்த புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாகவும், வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதாகவும், இதனை கண்டித்து தனியார் நிதி நிறுவனங்களை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, த.மு.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும், திருநங்கைகளும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் அண்ணாசிலை அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வணிக வளாகத்திற்குள் போராட்டக்காரர்களை நுழையவிடாமல் தடுக்கும் வகையில் நுழைவு வாயில் கதவு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
கோஷம்
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் அரசியல் கட்சியினர், மாதர் சங்கத்தினர், திருநங்கைகள் ஊர்வலமாக தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டுப்போடுவதற்காக வந்தனர். அப்போது அந்த வணிக வளாகம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களிடம் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், அழகம்மாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.