கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
புதுக்கோட்டை,
கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் 200 நாள் வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், ஊரடங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
பொன்னமராவதி
இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்தில், ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 6 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொன்னமராவதி இந்திரா நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பகுருதீன், பஸ் நிலையம் முன்பாக 2 இடங்களில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குமார், சாலையோர வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் கண்ணன் தலைமையிலும் என பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொன்னமராவதி பஸ் நிலையத்தில் மாநில குழு உறுப்பினர் ஏனாதி ராசு உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அன்னவாசல்
அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் தலைமை தங்கினார். இதில் ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர்கள் ஆனந்தன், நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சோலையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அன்னவாசல் ஒன்றியத்தில் குடுமியான்மலை, மேலூர் காவேரிநகர், ஆச்சநாயக்கன்பட்டி, தளுஞ்சி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், பிராம்பட்டி, சித்தன்னவாசல், சத்தியமங்கலம், மலைக்குடிப்பட்டி, ஆரியூர், சொக்கநாதன்பட்டி, பெருஞ்சுனை, நல்லம்மாள்சத்திரம், கட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கறம்பக்குடி
அறந்தாங்கியில் கட்டுமாவடி முக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீட்டு முறையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் அறந்தாங்கி தபால் நிலையம் முன், சுப்பிரமணியபுரம் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, அமரசிம்மேந்திரபுரம், திருநாளுர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன்் தலைமை தாங்கினார். ஊரடங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில், மத்திய, மாநில அரசுகள் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தி அம்புக்கோவில் முக்கம், அக்ரஹாரம், தீத்தான்விடுதி, செங்கமேடு, மணமடை உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய சங்க தலைவர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.