முதுகுளத்தூர் அருகே பரபரப்பு கூலிப்படையை ஏவி பெட்ரோல் குண்டு வீசிய பெண் வைக்கோல் படப்பு நாசம்; 5 பேருக்கு வலைவீச்சு
முதுகுளத்தூர் அருகே கூலிப்படையை ஏவி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச வைத்த பெண் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதில் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர், முனியசாமி. இவருடைய மனைவி வீரமாகாளசுவரி(வயது 45). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வில்வஜோதிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் வில்வஜோதி, வீரமாகாளசுவரியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக வெளியூரில் இருந்து தனக்கு தெரிந்த 4 பேரை அழைத்து வந்து பணம் கொடுத்து, வீரமாகாளசுவரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச கூறி இருக்கிறார். இதையடுத்து அந்த 4 பேரும் வீரமாகாளசுவரி வீட்டை நோட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
வைக்கோல் படப்பு நாசம்
அப்போது பெட்ரோல் குண்டு தவறி வீட்டின் அருகில் இருந்த வைக்கோல் படப்பு மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வைக்கோல் படப்பு முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வில்வஜோதி உள்பட 5 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவருகின்றனர்.
பரபரப்பு
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களுக்கும், வில்வஜோதிக்கும் அறிமுகம் ஏற்பட்டது எப்படி? வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.