கத்தார் நாட்டில் இருந்து நெல்லைக்கு வந்த 50 பேருக்கு கொரோனா பரிசோதனை

கத்தார் நாட்டில் இருந்து நேற்று நெல்லைக்கு வந்த 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-06-10 02:18 GMT
நெல்லை, 

கத்தார் நாட்டில் இருந்து நேற்று நெல்லைக்கு வந்த 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

விமானத்தில் வந்தனர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையொட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதுதவிர பிற நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

கத்தார் பயணிகள்

இந்த நிலையில் கத்தார் நாட்டில் தவித்து வந்த இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அதில் தமிழர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நேற்று காலை வந்து இறங்கினர்.

பின்னர் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பெண்கள் உள்பட 50 பேர் அரசு சிறப்பு பஸ்களில் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா பரிசோதனை

அவர்கள் அனைவரும் நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் கொரோனா உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனை மற்றும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவு இன்று (புதன்கிழமை) தெரியவரும். அப்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தனிமையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்