பணியிடை நீக்கத்தை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டம்

பணியிடை நீக்கத்தை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-10 00:28 GMT
புதுச்சேரி,

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து கடந்த 4-ந்தேதி புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே கோபாலன்கடை என்ற பகுதியில் வசிக்கும் தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். மறுநாள் காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டார்.

சென்னையில் இருந்து வந்தவர் என்பதால் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவரது உடல் கோபாலன் கடை பகுதியில் உள்ள இடுகாட்டில் அரசு சார்பில் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக அவரது குடும்பத்தினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்தபோது சவக்குழியில் தள்ளி அவமதித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உள்ளாட்சி துறை ஊழியர்கள் 2 பேர், சுகாதார ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரத்துறையில் பணியாற்றும் குரூப் டி பிரிவு ஊழியர்கள் நேற்று காலை தங்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவ அதிகாரி அலுவலகம் முன் திரண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரி கேட்டுக் கொண்டதன்பேரில் கொரோனா நோயாளியின் உடல் அடக்கத்துக்கு சென்ற சுகாதார ஊழியர் மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடைநீக்க நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று கோரி அவர்கள் அப்போது கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை ஏற்க மறுத்து குரூப் டி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சுகாதாரத்துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் சட்டசபைக்கு சென்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்து பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இ.எஸ்.ஐ. மற்றும் மார்பு நோய் மருத்துவமனையிலும் குரூப் டி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்