கொரோனாவால் உயிரிழந்தால் தொண்டு நிறுவனம் மூலம் உடல் தகனம் ; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

கொரோனாவால் உயிரிழந்தால் உடலை தொண்டு நிறுவனம் மூலம் தகனம் செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

Update: 2020-06-10 00:04 GMT
புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜநிலைக்கு திரும்பியுள்ளனர். வரும் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா மேலும் பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தற்போது கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக கூடுதலாக உபகரணங்கள் தேவைப்படுகிறது. இதனை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு 10-வது நாளில் செய்யப்படும் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினர் அனுமதியுடன் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் உரிய மரியாதையுடன் மின் தகனம் செய்வார்கள். இதற்கான கோப்பு கவர்னர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று கூடுதலாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் கதிர்காமம் கொரோனா அரசு மருத்துவமனையிலும், வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்.

புதுவையை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகி அங்கேயே தங்கியவர். மாகியில் அபுதாபியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் தற்போது கொரோனா தொற்றுடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 127-ல் இருந்து 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்