தலைமை செயலக பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 177 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பழனி தாலுகா பெருமாள்புதூரை சேர்ந்த 45 வயது பெண், அவருடைய 15 வயது மகன் மற்றும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 47 வயது பெண்ணும் ஆவர். இதில் பாதிக்கப்பட்ட தாயும், மகனும் டெல்லியில் வசித்தவர்கள். பின்னர் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் பெண், சென்னை தலைமை செயலக ஊழியர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதித்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.