கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு கரு கலைந்த பரிதாபம்-உறவினர்கள் போராட்டம்

ராய்ச்சூர் அருகே ரத்த போக்கால் அவதிப்பட்ட கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். இதனால் அந்த பெண்ணின் கரு கலைந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-09 23:42 GMT
ராய்ச்சூர்,

ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். அந்த இளம்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதே நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இளம்பெண்ணுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இளம்பெண்ணுக்கு திடீரென்று ரத்த போக்கு ஏற்பட்டு வலியால் துடித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை, நர்சுகள் மட்டுமே இருந்துள்ளனர்.

அந்த கர்ப்பிணி பெண் வலியால் துடிப்பது பற்றி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர் வலியால் பல மணிநேரம் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு, சுதாரித்து கொண்ட நர்சுகள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை அளிக்க தாமதமானதால், பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் தான், கரு கலைந்து விட்டதாக குற்றச்சாட்டு கூறினார்கள். மேலும் ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், டாக்டர்கள், நர்சுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இதற்கிடையில், கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது உண்மை தான் என்றும், சிகிச்சைக்கு தாமதமானதால் தான் பெண்ணின் கரு கலைந்திருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை முதன்மை அதிகாரியும், டாக்டருமான ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தற்போது ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ராய்ச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்