குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் மரப்பாலம்-பர்லியார் இடையே தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு பலா மரங்கள் ஊடுபயிராக நடவு செய்யப்பட்டு உள்ளது. அந்த மரங்களில் பலா பழ சீசன் தொடங்கி இருப்பதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து மரப்பாலம், பர்லியார் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் 3 பிரிவாக பிரிந்து கொலக்கொம்பை, கிளிஞ்சடா, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகிறது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டுயானை அடிக்கடி சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளது.
அரசு பஸ்சை வழிமறித்தது
இந்த நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. பர்லியார்-கே.என்.ஆர்.நகர் இடையே வந்த போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று அரசு பஸ்சை வழிமறித்தது. உடனே டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார். பஸ்சுக்கு பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் பின்னால் செல்ல முடியவில்லை. பயணிகள் பீதி அடைந்தனர். 20 நிமிடங்களுக்கு பின்னர் காட்டுயானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு அரசு பஸ் மற்றும் பிற வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.