திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்-மகன்
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 70 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று திருவாரூர் அருகே கூடுர் காட்டாற்று பாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் டிரைவராக உள்ளார். இவரது 38 வயதுடைய மனைவி மற்றும் 13 வயது மகன் ஆகிய இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் செருமங்கலம் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர், கொரடாச்சேரி மேலதிருமதிகுன்னம் சேர்ந்த 43 வயதுடையவர், மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த 33 வயதுடையவர் மற்றும் அவருடைய மனைவி, வடபாதிமங்கலத்தை சேர்ந்த 40 வயதுடையவர், அவருடைய மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
41 பேருக்கு சிகிச்சை
மன்னார்குடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் அவருடைய 5 வயது ஆண் குழந்தை, குடவாசல் புதுக்குடியை சேர்ந்த 25 வயது பெண், தலையாமங்கலத்தை சேர்ந்த 25 வயதுடைய லாரி டிரைவர், மன்னார்குடியை சேர்ந்த 44 வயதுடையவர் மற்றும் 22, 29 வயதுடைய 2 வாலிபர்கள், திருத்துறைப்பூண்டி பள்ளகோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் என மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 16 பேரும் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 41 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.