பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-09 22:58 GMT
ஊட்டி,

மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை மூலம் சிகிச்சை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஊட்டி நகர செயலாளர் சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித்தொகையாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மின்சார சட்ட திருத்தம்

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் போஜராஜ் கூறும்போது, மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது என்றார்.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ் தலைமை தாங்கினார். கோத்தகிரி தாலுகா செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சமூக இடைவெளி

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் குஞ்சு முகமது தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ஆஷா பணியாளர்களுக்கு மாத சம்பளம் நீலகிரியில் ரூ.1,500 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் வால்பாறையில் ரூ.2 ஆயிரமும், ஈரோட்டில் ரூ.1,800-ம் வழங்கப்படுகிறது. இது முரண்பாடாக உள்ளது. எனவே கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். இதேபோன்று குன்னூர், மஞ்சூர், பந்தலூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்