கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: ரேஸ்கோர்சில் நடைபயிற்சிக்கு தடை கலெக்டர் அறிவிப்பு

கொரோனா பரவுவதை தடுக்க ரேஸ்கோர்சில் நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜாமணி அறிவித்து உள்ளார்.

Update: 2020-06-09 22:30 GMT
கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்ல வசதி உள்ளது. இங்கு அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது யாரும் நடைபயிற்சி செய்யவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை. அத்துடன் சமூக இடைவெளியும் கடைபிடிப்பது இல்லை.

இதற்கிடையே கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக இடைவெளி இல்லை

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நடைபயிற்சி செல்லும் இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. மேலும், முகக்கவசம் அணியாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

நடைபயிற்சி செல்ல தடை

எனவே இன்று (அதாவது நேற்று) முதல் மறு உத்தரவு வரும் வரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்