காஞ்சீபுரம் அருகே திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி அடித்துக்கொலை; கணவன் கைது

காஞ்சீபுரம் அருகே காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-10 00:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி புதூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரி (வயது 23). கட்டிடங்களுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். அதே தெருவை சேர்ந்தவர் தேவி (19). இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஹரி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வருத்தம் அடைந்த தேவி ஏன் மது குடிக்கிறாய், திருந்த மாட்டாயா என்று கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரி மனைவி தேவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் இரும்பு கம்பியால் தேவியின் தலையில் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த தேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து தேவியின் தந்தை குமார் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தலைமறைவான ஹரியை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடினர். இதற்கிடையில் கீழம்பி அருகே ஹரியை போலீசார் கைது செய்தனர். கொலையான தேவி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்