வேறு நபருடன் பேசியதால் ஆத்திரம்: கத்திரிக்கோலால் குத்தி பெண் கொலை கள்ளக்காதலன் கைது

வேறு ஒரு நபருடன் பேசியதால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தி பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-09 23:45 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் யசோதா ராணி (வயது 42). இவருக்கு கணவரும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர் புதுபெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவருக்கும், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் தையல் கடையில் இருந்த யசோதா ராணியிடம், செல்வக்குமார் பேசி கொண்டிருந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து திடீரென்று யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த யாசோதா ராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்வக்குமார் தப்பிச்சென்றதை கண்காணித்தனர்.

அதில் பெருங்களத்தூர் ரோஜா தோட்டம் அருகே செல்வக்குமாரின் மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்றது. அந்த பகுதியில் போலீசார் தேடியபோது, பைபாஸ் சாலை சர்வீஸ் சாலை அருகே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து இருந்த செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், கைதான செல்வக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2008ல் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இதற்கு முன்பு குரோம்பேட்டை பகுதியில் வசித்துவந்த யசோதா ராணியுடன், திருமணத்துக்கு முன்பு இருந்தே செல்வக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இதையறிந்த செல்வக்குமாரின் மனைவி, அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.

தனியாக இருந்த செல்வக்குமார், மீண்டும் யசோதா ராணியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் உல்லாசமாக சுற்றி வந்துள்ளார். இதற்கிடையில் யசோதா ராணி வேறு ஒரு நபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இதையறிந்த செல்வக்குமார், நான் இருக்கும்போது வேறு ஒருவருடன் எப்படி பேசலாம் என அவரை கண்டித்தார்.

இதற்கிடையில் அந்த நபர், யாசோதா ராணியின் மகள் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் கொடுத்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், நேற்று மதியம் யசோதாராணியுடன் இது தொடர்பாக தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்த 4½ மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்