மின்வேலி அமைக்க மானியம் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா அறிக்கை

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-06-09 06:45 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-21-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட வேளாண்மைத்துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்வேலி அமைப்பானது சூரியஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்கக் கூடியது. சூரிய மின்வேலி அமைப்பதனால் வன விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின்வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அசவுகரியம் ஏற்படுத்தப்பட்டு வேலி தாண்டி உள்ளே நுழைவது தடுக்கப்படுவதால் விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ.250-ம், 7 வரிசைக்கு ரூ.350-ம் மற்றும் 10 வரிசைக்கு ரூ.450-ம் செலவாகும். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் அல்லது 1,245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். மேலும் சூரிய மின்வேலி அமைப்பிற்கான செலவு தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மானியமாக வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனைத்து மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால் வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அரியலூர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஜெயங்கொண்டம் அலுவலகம் ஆகியவற்றினை விவசாயிகள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்