78 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

78 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்று வந்த பாம்பன் மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update:2020-06-09 10:00 IST
ராமேசுவரம்,

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் தடைகாலம் முடிந்தும் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 40 விசைப்படகுகளில் 250-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பல வகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். இவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் வலையில் கிளாத்தி, விளை, நகரை, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகன்னிபாறை, கட்டா, சூவாறை உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கியிருந்தன.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையால் கடந்த 78 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதி நேற்று மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பியதை தொடர்ந்து மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதனால் தெற்குவாடி துறைமுக கடற்கரை மீனவர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது. மீனவர்கள், வியாபாரிகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை.

விலை குறைய வாய்ப்பு

இதுபற்றி பாம்பன் மீனவர் பேட்ரிக் கூறியதாவது:-

78 நாட்களுக்கு பிறகு மீன் பிடித்து கரை திரும்பியதில் ஒவ்வொரு படகிலும் 1½ டன் முதல் 2 டன் வரை பல வகை மீன்கள் கிடைத்துள்ன. மீன் பிடிக்க சென்ற ஒவ்வொரு படகும் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை செலவு செய்து மீன் பிடிக்க சென்று வந்ததில் ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மீன்கள் கிடைத்துள்ளன.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான மீன்கள் கிடைத்துள்ளதோடு பிடித்து வந்த மீன்களுக்கும் நல்ல விலையும் கிடைத்துள்ளது. இன்னும் 1 வாரத்திற்கு பிறகு தான் அனைத்து வகை மீன்களுக்கும் தற்போதுள்ள விலையை காட்டிலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் பிடித்து வந்த மீன்களின் விலை பின்வருமாறு கிலோவில் வருமாறு:- பாறை ரூ.300, சீலா ரூ. 750, மாவுலா ரூ.400, சூவாறை ரூ.105, நகரை ரூ.150, கிளாத்தி ரூ.230, விளை ரூ.350. தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்று வந்த மீனவர்களுக்கு வழக்கத்தை காட்டிலும் அதிக மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பனில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதோடு ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்