வள்ளியூர் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் கார்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில், சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.;
ஏர்வாடி,
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் கார்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில், சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஹால் டிக்கெட் வாங்க...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). சமையல் தொழிலாளி. இவருடைய தங்கை தளபதிசமுத்திரத்தில் வசித்து வருகிறார். அவரது மகள் காவ்யா (16). இவர் தளபதிசமுத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு விடுமுறை என்பதால், காவ்யா, மாமா கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று காவ்யா தனது மாமா கண்ணனிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் காவ்யா மற்றும் மகன் சபரீஷ் (9), தம்பி மகள் மகிஷா (7) ஆகியோரை அழைத்துக்கொண்டு தளபதிசமுத்திரம் வந்து பள்ளியில் ஹால் டிக்கெட் வாங்கினார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் சிங்கனேரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கார்- மோட்டார்சைக்கிள் மோதல்
தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி திரும்பியபோது நெல்லையில் இருந்து பணகுடி நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கண்ணன், சபரீஷ், காவ்யா, மகிஷா ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் மற்றும் சிறுமி மகிஷா ஆகிய இருவரும் இறந்தனர். காவ்யா, சபரீஷ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.