சென்னையில் இருந்து தர்மபுரி வந்த கல்வித்துறை அதிகாரிக்கு கொரோனா

சென்னையில் இருந்து தர்மபுரி வந்த கல்வித்துறை அதிகாரி மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பிய 4 தொழிலாளர்கள் என 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2020-06-09 02:17 GMT
தர்மபுரி,

தர்மபுரி பிடமனேரி மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழக கல்வித்துறையில் அரசு தேர்வுகள் இணை இயக்குனராக (பணியாளர்) பணிபுரிந்து வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கண்காணிப்பு அலுவலராகவும் இவர் செயல்பட்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தர்மபுரி வந்த அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கல்வித்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அந்த துறையை சேர்ந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில் மூலம் சேலம் வந்தனர். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவர்களில் ஒரு பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்