சிவசேனா எம்.பி. கடுமையாக விமர்சித்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் நடிகர் சோனுசூட் திடீர் சந்திப்பு

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் நடிகர் சோனுசூட் திடீரென சந்தித்து பேசினார்.

Update: 2020-06-09 01:50 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சோனுசூட். தமிழ்ப்படங்களிலும் நடித்து உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். அவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் ஆளும் சிவசேனாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக சோனு சூட் திடீர் மகாத்மாவாக மாறியிருப்பதாகவும், அவரை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றுமுன்தினம் சாம்னா நாளேட்டில் கடுமையாக சாடியிருந்தார்.

அவர் பாரதீய ஜனதாவில் இணைவார் என்றும் சஞ்சய் ராவத் ஆரூடம் கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், நேற்றுமுன்தினம் இரவு திடீரென நடிகர் சோனுசூட் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்தார். அப்போது, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக செய்த உதவிக்காக நடிகர் சோனுசூட்டை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பாராட்டினார். பின்னர் இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது:-

நாம் கஷ்டப்படும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். கடைசி புலம்பெயர் தொழிலாளர் சொந்த ஊர் திரும்பும் வரை நான் எனது உதவியை தொடருவேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்