அமர்ந்து சாப்பிட அனுமதி: ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-06-09 00:50 GMT
திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டல், டீக்கடை, மளிகை கடை, காய்கறி சந்தை என அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதற்கிடையே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, டீக்கடை, ஓட்டல், மளிகை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஓட்டல்களில் மட்டும் பார்சல் முறையில் உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களில் மேஜை, நாற்காலிகள் தூய்மைப்படுத்தும் பணியும், பின்னர் அவற்றை சமூக இடைவெளியுடன் வைக்கும் பணியும் நடந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்காக வரத்தொடங்கினர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். முன்னதாக ஓட்டல்களுக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வழங்கப்பட்டது.

மேலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் நாற்காலிகள், மேஜைகள் மீது கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் வைக்கப்பட்டுள்ள மேஜை, நாற்காலிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வைக்கப்பட்டுள்ளதா? வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு சென்றதும், அந்த நாற்காலி, மேஜை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகிறதா?, ஓட்டல்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்தாமல் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்