வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதி ; கோவில்களில் கூட்டம் அலைமோதியது

புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-06-09 00:11 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு தளர்வுடன் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை திறக்க புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. வணிக வளாகங்களும் செயல்பட தடை இல்லை. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதுவையில் நேற்று காலை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், செட்டிக்கோவில், முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரகாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோதண்டராமர், ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள், கற்பக விநாயகர், வசந்த நகரில் உள்ள குருவேலயுத ஈஸ்வரர், சாரத்தில் உள்ள கிருஷ்ணன், மகாவீர் நகரில் உள்ள பெருமாள், ரெயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்பிரமணிய சாமி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள், வீராம்பட்டிணம் செங்கழுநீரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனத்திற்காக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அரவிந்தர் ஆசிரமமும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்களது கைகளை கழுவிய பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் விபூதி, குங்குமம், பூ மற்றும் பிரசாதங்கள் போன்றவை வழங்கப்படவில்லை. மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் புதுவை மாவட்ட கலெக்டர் அருண், புதுவை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்த தம்பதிகளை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி.சுரேந்திர சிங் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தவர்களை சமூக இடைவெளியை விட்டு நிற்கும்படி அறிவுறுத்தினார்.

இதேபோல் ஓட்டல்களிலும் நேற்று சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். மேலும் வணிக வளாகம் திறக்கப்பட்டது. அங்கு வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து கிருமி நாசினி வழங்கப்பட்டது. வணிக வளாகத்தில் தியேட்டர்கள் செயல்படாததால் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இதேபோல் புதுவை தாவரவியல் பூங்கா நேற்று முதல் செயல்பட தொடங்கியது. தற்போது விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் சிலர் தங்களது பெற்றோருடன் அங்கு வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்