தமிழகம், புதுச்சேரி அரசுகள் 3 மாத மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது ; தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி அரசுகள் 3 மாத மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
மருத்துவக் கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி மறைமலையடிகள் சாலை சுதேசி மில் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்றபடி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதன்பின் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. நம்மை நாமே தற்காத்து கொள்வது சமூகக் கடமை ஆகும். இதில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு திருப்தி இல்லை. கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறைத்து காட்டப்படுவதாக தகவல் வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஆஸ்பத்திரிகளில் புதிய கட்டமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைப்பதை விட அதை ரத்து செய்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும். சென்னையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே வீடு, வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதுதொடர்பான வல்லுநர் குழு தெரிவித்த கருத்துக்களை அரசு பொருட்டாக கருதவில்லை. சென்னையை 100 சதவீதம் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டும். மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்குவதை திரும்பப் பெற வேண்டும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணத்தை தமிழகம், புதுவை அரசுகள் வசூலிக்கக் கூடாது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.