மனைவியை வெட்டிக்கொன்ற ஐஸ் வியாபாரி கிரைண்டரில் தவறி விழுந்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலம்
திருத்துறைப்பூண்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.;
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர், மனைவி கிரைண்டரில் தவறி விழுந்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
ஐஸ் வியாபாரி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). ஐஸ் வியாபாரி. இவருடைய மனைவி பானுமதி(60). இவர்களுக்கு குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். குமார், திருத்துறைப்பூண்டியில் டிராக்டர் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று மதியம் பானுமதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பானுமதிக்கும், அவருடைய கணவர் செல்வராஜுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
அரிவாள் வெட்டு
இந்த தகராறின்போது சமையல் செய்து கொண்டிருந்த அடுப்பில் செல்வராஜ் தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பானுமதி, செல்வராஜை தாக்கி உள்ளார். இதையடுத்து செல்வராஜ், அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பானுமதியின் தலையில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பானுமதியை மகன் குமார் மற்றும் உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மருத்துவமனையில் நாடகம்
முன்னதாக மருத்துவமனைக்கு வந்த செல்வராஜ், மாவு அரைக்கும்போது கிரைண்டர் மீது தவறி விழுந்ததில் பானுமதிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி நாடகமாடி உள்ளார். ஆனால் டாக்டர்கள் பானுமதிக்கு ஏற்பட்டிருந்த காயங்களை பார்த்து, இதில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வராஜை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஆத்திரத்தில் தனது மனைவியின் தலையில் அரிவாளால் வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார்.
கைது
இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.