கலெக்டர் அறிவித்த சம்பளத்தை வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த சம்பளத்தை வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-06-08 22:54 GMT
ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்தார். ஆனால் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.420 என மாதத்துக்கு ரூ.12 ஆயிரத்து 600 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த சம்பளத்தை வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும், முறையாக குறித்த தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு நாள் சம்பளம் குறைத்து கணக்கிட்டு வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்