பிளஸ்-1 தேர்வு எழுத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெளியூர் பயணம்
தமிழக அரசின் சிறப்பு பஸ்கள் மூலம் பிளஸ்-1 தேர்வு எழுத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெளியூர் பயணம் செய்தனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் கொரோனா எதிரொலி காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இதனையடுத்து வருகிற 16-ந் தேதி பிளஸ்-1 வகுப்பு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்த நிலையில் கோவையில் இருந்து தமிழக அரசின் சிறப்பு பஸ்கள் மூலம் இலவசமாக சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூருக்கு மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் பிளஸ்-1 தேர்வு எழுத ஒரு மாணவி உட்பட 8 மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னை வரை செல்லும் பஸ்சில் ஊட்டியிலிருந்து மாற்றுத்திறனாளியை சேர்ந்த ஒரு மாணவி உட்பட 4 மாணவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை செல்லும் தமிழக அரசின் சொகுசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
இதே போல தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் ஒரு மாணவனை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.திருவள்ளூர், பூந்தமல்லி கண் பார்வையற்றோர்க்கான பள்ளியில் தேர்வு எழுத பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் இருந்து 4 மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த பஸ் சேலத்தில் 8, தர்மபுரி 8, கிருஷ்ணகிரி 4 என மொத்தமாக 24 கண் பார்வையற்ற மாணவர்களை பூந்தமல்லி கண் பார்வையற்றோர் பள்ளிக்கு பிளஸ்-1 தேர்வு எழுதுவதற்காக அழைத்து செல்ல இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.