தூத்துக்குடியில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா நெல்லை, தென்காசியில் 7 பேருக்கு தொற்று உறுதி

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை, தென்காசியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-06-08 23:00 GMT
தூத்துக்குடி,

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தாக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களாலும், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் கொரோனா பரவி வந்தது. இந்த பரவல்கள் கட்டுக்குள் வந்த நிலையில், சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் வந்தவர்களால் பரவத் தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் வரை 329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடியில், சென்னையில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று செய்துங்கநல்லூரில் 5 பேரும், கொல்லம்பரும்பு, கொம்பம்பட்டி சிறுத்தொண்டநல்லூர், ஸ்ரீவைகுண்டம், திருக்களூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் ஆக மொத்தம் 26 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்து உள்ளது.

கூட்டாம்புளி பகுதியில் ஒரே நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் செல்லவும், வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் சென்று மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 386 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் வெளியூரில் இருந்து வந்தவர் ஒருவர் ஆவார். இதுதவிர நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறை வார்டன், ஆவின் பால்பண்ணை அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. நேற்று அவர்களை சார்ந்தவர்களில் 3 பேருக்கு தொற்று பரவி உள்ளது. அவர்கள் பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து 4 பேரும் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளூரில் இதுவரை மொத்தம் 123 பேருக்கு கொரோனா பரவியது. வெளியூரில் இருந்து வந்த 267 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது. இதில் 344 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 45 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

நெல்லை ரெட்டியார்பட்டி ஆவின் பால்பண்ணை அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் நேற்று மருத்துவ குழுவினர் பால்பண்ணைக்கு சென்றனர். அங்கு வேலை செய்யும் அலுவலர்கள், ஊழியர்கள் என மொத்தம் 63 பேருக்கு கொரோனா இருக்கிறதா? என்பதை கண்டறிய சளி மாதிரியை சேகரித்தனர். அந்த மாதிரிகள் அனைத்தும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை கூடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் 88 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். மீதி 18 பேர் மட்டும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்