மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால், கரூர் மாவட்ட பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

Update: 2020-06-08 06:03 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோரை விவசாயமும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விவசாயமும், அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் கடவூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் நடவு செய்யப்படுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களில் 120 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த (ஜூலை) மாதத்திற்குள் மரவள்ளி கிழங்கு நடவு மேலும் அதிகரித்து, 600 எக்டேருக்கு மேல் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தண்ணீர் தேவை குறைவு

இதுகுறித்து மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், மரவள்ளி கிழங்கு நடவு செய்வது என்பது கரும்பு, வாழை உள்ளிட்டவற்றிற்கு செய்யும் செலவை காட்டிலும் கூலி ஆட்கள் செலவு குறைவு. நெல், கரும்பு உள்ளிட்டவற்றிக்கு தண்ணீர் தேவை அதிகம். ஆனால் மரவள்ளி கிழங்கிற்கு தண்ணீர் தேவை குறைவு. மரவள்ளி கிழங்கு நடுவதால் ஒரு ஆண்டுக்கு வேறு பயிர்கள் செய்ய முடியாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மரவள்ளி கிழங்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு டன் ரூ.12 ஆயிரம் விற்கப்பட்ட மரவள்ளி கிழங்கு, கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டதால், விலை சரிந்து டன் ரூ.8,300-க்கு விற்றது. தற்போது ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதால், மீண்டும் விலை ஏறும் வாய்ப்பு உள்ளதாலும், தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாலும் விவசாயிகள் பலர் மரவள்ளி கிழங்கு சாகுபடியை ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்