கொரோனாவின் கொடூரம் புரியாமல் திருச்சியில் முக கவசம் அணியாமல் வெளியில் செல்லும் பொதுமக்கள் சென்னையை போல் வேகமாக பரவும் அபாயம்

கொரோனாவின் கொடூரம் புரியாமல் திருச்சி நகரின் பல பகுதிகளில் மக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்கிறார்கள். இதனால், சென்னையை போல் திருச்சியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-06-08 05:28 GMT
திருச்சி, 

கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற மூன்றெழுத்து அரக்கனின் அட்டகாசம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரம் ஆக இருந்தது. இதில், 6,642 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,458 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இது, இதுவரை இல்லாத வேகம் ஆகும். மாநில அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை 251 ஆனது.

முக கவசம் கட்டாயம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையை தான் கொரோனா வைரஸ் குறி வைத்து தாக்குகிறது என்றாலும், மற்ற மாவட்டங்களுக்கும் அதன் அபாயம் இல்லை என்று கூறி விட முடியாது. பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதன் மூலம் சென்னையில் இருந்து வருபவர்களின் மூலம் மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் நிலை உள்ளது.

சென்னை உள்பட அதன் அருகில் உள்ள 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொடூரம் புரியாமல்...

ஆனால், திருச்சி நகரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் அரசு உத்தரவை துச்சமாக மதித்து வெளியில் முக கவசம் அணியாமல் செல்கிறார்கள். கடைகளுக்கு காய்கறி வாங்க வரும்போதோ அல்லது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நடந்து செல்லும்போதோ, இருசக்கர வாகனங்களில் செல்லும்போதோ பலர் முககவசம் அணிவதே இல்லை.

கொரோனாவின் கொடூரம் புரியாமல், இவ்வாறு வெளியில் செல்லும்போது எந்த நேரத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடும். அவர்களுக்கு ஏற்படுவதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும்

இதேபோல், சிறிய அளவிலான கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், கார், வேன் ஓட்டுபவர்களும், தொழிலாளர்களும் முக கவசம் அணிவது இல்லை. சிலர் முக கவசத்தை வாய், மூக்கை மறைத்து முழுமையாக அணியாமல் பெயருக்கு கழுத்துக்கு கீழ் கட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

வேகமாக பரவும்

முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தாலும், அதன்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளோ, போலீசாரோ தயாராக இல்லை. நமது உயிருக்கு நாமே பாதுகாப்பு, நமது உயிரை மற்றவர்களிடம் இருந்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், நம்மால் மற்றவர்களுக்கு பரவி விடக்கூடாது என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படவேண்டும். இல்லை என்றால் சென்னையை போல் திருச்சியிலும் கொரோனா வேகமாக பரவும் அபாயத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.

மேலும் செய்திகள்