விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய் பிரசாரம் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து மாவட்ட பா.ஜனதா அணி பிரிவு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் கூட்டமும் நடைபெற்றது. இதன் பின்னர் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் தொடர்பு திட்டம்
பிரதமர் மோடி சமீபத்தில் மக்களுக்காக எழுதிய கடிதத்தை வீடுகள் தோறும் கொண்டு செல்ல மக்கள் தொடர்பு திட்டத்தை வரும் 10-ந் தேதி முதல் தொடங்கவுள்ளோம். மேலும், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தும் தற்சார்பு பாரதம் நிகழ்வையும் பா.ஜனதா முன்னெடுக்கவுள்ளது.
திருப்பூரை பொறுத்தவரை சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலமாக தேவையான கடன்கள் முழுவீச்சில் அளிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் வழங்கும் கடனை நிதியமைச்சகம் ஆய்வு செய்கிறது.
கடனை சரியாக திருப்பி செலுத்துகின்ற நிறுவனங்களுக்கு கையெழுத்து கூட பெறாமல் கடன் விரைவாக வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு தொடர்ந்து அளித்துக்கொண்டே வருகிறது. ஜி.எஸ்.டி.யை பொறுத்தவரை தற்போது நிலுவைத் தொகை எதுவும் இல்லை. அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
பொய் பிரசாரம்
மின்சாரத்துக்காக கூட ரூ.90 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளித்து உதவியிருக்கிறது. இலவச மின்சாரம் என்பது இங்கு விவசாயிகளுக்கு மறுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 லட்சம் விவசாயிகள் இந்த திட்டம் மூலமாக பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது மக்களுக்கான நஷ்டமே ஆகும். இதை சரி செய்யவே மத்திய அரசு மாநில அரசிடம் கருத்து கேட்கிறது. மத்திய அரசு விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.