தஞ்சை மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-08 04:27 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல குணம் அடைந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் இருந்து தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி, சாக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை சாலை காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பலர் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு வந்ததில் மானோஜிப்பட்டியை சேர்ந்த 22 வயதான கர்ப்பிணி, நாஞ்சிக்கோட்டை சாலை காயிதே மில்லத் நகரை சேர்ந்த 32 வயது வாலிபர், சாக்கோட்டையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது வீடு இருக்கும் பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினியை தெளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் வாசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வெளிநபர்கள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்