ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 12 பேருக்கு கொரோனா 14 பேர் குணமடைந்தனர்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Update: 2020-06-08 03:34 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்தது. இந்த நிலையில் கமுதி மண்டலமாணிக்கம் எம்.பள்ளபச்சேரியை சேர்ந்த 26 வயது பெண், கடலாடி மேலச்செல்வனூர் கிழக்கு தெருவை சேர்ந்த 19 வயது நபர், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர், மண்டபம் முகாம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 55 வயது நபர், ராமநாதபுரம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த 75 வயது நபர், தொண்டியை சேர்ந்த 35 வயது நபர் ஆகிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் சுகாதார பணியாளர் என்பதும், நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த 75 வயது நபர் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலையை கருத்தில் கொண்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 29 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தாசில்தாருடன் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருவதால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

வீடு திரும்பினர்

மற்றவர்கள் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பெண்கள் உள்பட 12 பேரும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கீழக்கரையை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் என மொத்தம் 14 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் மற்றும் கல்லல் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர்கள் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்