கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி வழிப்பறி 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

அலங்காநல்லூர் அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-06-08 01:32 GMT
அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடுவை சேர்ந்தவர் நேசபாலன்(வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து பாலமேடு நோக்கி அலங்காநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். சிக்கந்தர் சாவடி அருகே வந்த போது தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, அவரை கத்தியால் குத்தினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நேசபாலனிடம் இருந்த ரூ.34 ஆயிரத்து 500, ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த நேசபாலன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துமணி(27). கட்டிட தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளி பூங்காவில் நடந்து வரும் கட்டிட பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். விராலிப்பட்டி பிரிவு மேம்பாலத்தின் அருகில் மேலே ஏறிசென்ற போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 மர்ம நபர்கள் முத்துமணியின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்