‘இ-டாய்லெட்’ கட்டும் பணிக்காக நகராட்சி மார்க்கெட்டில் தோண்டிய குழிகளை மூட வேண்டும் வியாபாரிகள் கோரிக்கை
‘இ-டாய்லெட்’ கட்டும் பணிக்காக நகராட்சி மார்க்கெட்டில் தோண்டிய குழிகளை மூட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
குன்னூர்,
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கெட்டை ஒட்டியுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், கடைகள் அதிகமாக இருந்ததாலும் மார்க்கெட்டை விரிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன் பேரில் விநாயகர் கோவிலுக்கு கீழ்புறம் வணிகவளாகத்தில் 33 கடைகள் அமைக்கப்பட்டன. இதன் அருகே இருந்த நடைபாதையை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே அந்த வணிகவளாகம் அருகே ‘இ-டாய்லெட்’ கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 3 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் ‘இ-டாய்லெட்’ அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. ஆழமாக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படவில்லை.
அபாயகரமான குழிகள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரி ஒருவர் கடையை பூட்டி விட்டு திரும்பி சென்ற போது, நடைபாதையில் இருந்த குழியில் தவறி விழுந்து விட்டார். அவரை அருகே இருந்த கடைக்காரர்கள் குழியில் இருந்து மேலே தூக்கி காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. எனவே அபாயகரமாக உள்ள அந்த குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.