முத்தண்ணன் குளக்கரையில் வசித்தவர்களை நகர பகுதியில் குடியமர்த்தக்கோரி மறியல் போராட்டம் எம்.பி. தலைமையில் திரளானவர்கள் பங்கேற்பு
முத்தண்ணன் குளக்கரை யில் வசித்தவர்களை நகர பகுதியில் குடியமர்த்தக்கோரி பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை முத்தண்ணன் குளக்கரையில் குமாரசாமி காலனி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில்
இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் 922 வீடுகளை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை
மாற்று வாரியம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். பலர் அங்கு சென்றுவிட்டனர். இன்னும் பலர் அங்கு
செல்லவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காலியான வீடுகளை இடிக்கும் பணி தொடங்கி நடந்தது. நேற்றும் இடிக்கும்
பணி போலீஸ் பாதுகாப்புடன் நடக்க இருந்தது.
எம்.பி. தலைமையில் மறியல்
இந்த நிலையில் கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை அங்கு
குவிந்தனர். பின்னர் அவர்கள் மாற்று இடம் வழங்காதவர்களின் வீடுகளை இடிக்கக்கூடாது என்றும், அவர்களுக்கு நகரப்பகுதியிலேயே
மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் திரளானவர்கள் தடாகம்
சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சிலர் பொக்லைன் எந்திரங்கள் முன்பும் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து
தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கலைந்து சென்றனர்
நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்பது எனவும், அதுவரை ஆட்சேபனை
தெரிவித்துள்ளவர்களின் வீடுகளை இடிப்பதில்லை எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு
அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினை குறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறியதாவது: -
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு புறநகர் பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாற்று
இடம் வழங்காதவர்களுக்கு நகரப்பகுதிகளில் மாற்று இடம் வழங்க வேண்டும். நகரத்தை அழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில்
உழைப்பாளி மக்களை வெளியேற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நகரின் வளர்ச்சிக்கு காரணமே இந்த உழைப்பாளி
மக்கள்தான்.
ஒத்தி வைத்துள்ளோம்
நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியளித்துள்ளதால் போராட்டத்தை
ஒத்தி வைத்துள்ளோம். உழைப்பாளி மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எங்களது போராட்டத்தை திரும்பப்பெற
மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, பேரூர் நகர செயலாளர் சேட்டு என்கிற
பாலசுப்பிரமணியன், மேற்கு நகரக்குழு உறுப்பினர் ராதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மேற்கு
நகர செயலாளர் ஜேம்ஸ், சி.பி.ஐ (எம்.எல்) மாநகர செயலாளர் வேல்முருகன் மற்றும் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட
கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.