தரங்கம்பாடி தாலுகா பகுதியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆய்வு
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.
பொறையாறு,
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி தரங்கம்பாடி தாலுகா பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் குடிமராமத்து பணிகள் மற்றும் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி பொறையாறு அருகே காலமநல்லூர் கிராமத்தில் ரூ. 13 லட்சத்தில் மருதம்பள்ளம் வாய்க்கால், செங்கந்தி தலைப்பு மதகு மறுக்கட்டுமானம் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகள், எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் மகிமலையாறு தம்பிநாயகன் ஷட்டர் மறு கட்டுமான பணிகள் ஆகியவை குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நாகை கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செடி,கொடிகள் அகற்றும் பணி
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு, பொதுப்பணித்துறை மூலமாக 131 குடிமராமத்து பணிகள் மற்றும் 50 இதர திட்டப்பணிகள் வாயிலாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 3,167 கி.மீ. தூரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 900 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள், காவிரி தண்ணீர் வருவதற்குள் முடிவடையும். ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் செடி, கொடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மண் மூட்டைகள் தயார்
ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம் தண்ணீரை விவசாயத்திற்கு கொண்டு சேர்க்கவும், சேமித்துவைத்து, குடிநீர் ஆதாரங்களை பெருக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மழை வெள்ளம், இயற்கை பேரிடர் காலங்களில் ஆறு மற்றும் வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கரைகள் உயர்ந்தபட்டு உள்ளது. தேவையான அளவுக்கு மண் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, பொறையாறு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோவில் உதவி பொறியாளர் வீரப்பன், கோவை வேளாண் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மாரியப்பன் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.