திருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
திருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கணவன்-மனைவி
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலன் கருதி ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்துள்ள நிலையில் பல்வேறு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பூதமங்கலம் பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்பொருள் அங்காடி கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்கள் முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது 3 பேருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
18 பேர் சிகிச்சை
இதேபோல் சென்னையில் இருந்து மன்னார்குடி நெடுவாக்கோட்டை வடசேரி பகுதிக்கு வந்த 8 வயது பெண் குழந்தை, துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் ஆகிய இருவருக்கும்் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 5 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.