கடலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update: 2020-06-07 00:39 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 474 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 440 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று 119 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் அவரது கணவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் ரத்த மாதிரி மற்றும் உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. இதில் அந்த பெண் டாக்டர் மற்றும் அவரது கணவருடன் தொடர்பில் இருந்த 29 மற்றும் 31 வயதுடைய 2 வாலிபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனி வார்டில் சிகிச்சை

இது தவிர சென்னையில் இருந்து கடலூர் புதுப்பாளையம் பகுதிக்கு வந்த 49 வயது நபருக்கும், புவனகிரியை சேர்ந்த 40 வயது நபருக்கும், மங்களூரை சேர்ந்த 45 வயது நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 443 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 455 பேருக்கு பரிசோதனை செய்ததில், 479 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 798 பேருக்கு பாதிப்பு இல்லை. 178 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்