நெல்லை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் மருத்துவ குழுவினர் பரிசோதனை
சென்னையில் இருந்து வருபவர்களை கண்காணிக்க நெல்லை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை,
சென்னையில் இருந்து வருபவர்களை கண்காணிக்க நெல்லை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. வெளி மாநிலங்களில் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வரும் மக்களை ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் சோதனை நடத்திய பிறகே அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் அந்தந்த மாவட்ட போலீசாரால் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கங்கைகொண்டான் சோதனை சாவடி
நெல்லை-தென்காசி மாவட்டத்தில் கங்கைகொண்டான், கிருஷ்ணாபுரம், காவல்கிணறு, இட்டமொழி, மாறாந்தை, தேவர்குளம், ஆம்பூர், பாப்பாங்குளம், தேவதானம் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனை சாவடிகளில் போலீசார், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பாஸ்களை வாங்கி சரிபார்த்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட மும்பை, சென்னை, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ளனர். இவர்கள் தற்போது அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் நெல்லைக்கு வருகின்றன. அந்த வாகனங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியை கடந்து தான் மாவட்டத்துக்குள் வர வேண்டும். இதனால் அங்கு போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பரிசோதனை
மேலும், வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம் அங்கு முழுவிவரமும் அதாவது, இ-பாஸ், முகவரி, ஆதார் அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அவர்களை அங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று உறுதியானால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
இதற்காக கங்கைகொண்டான் சோதனை சாவடியில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் காய்ச்சல், சளி பரிசோதனை செய்வதற்காக, அருகில் உள்ள ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். துணை தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினரும் பணியில் இருக்கின்றனர். மேலும் கொரோனா பரிசோதனை மையத்திலும் போலீசார், வருவாய்த்துறையினர், மருத்துவக்குழுவினர் உள்ளனர்.
காத்திருக்கும் நிலை
கொரோனா பரிசோதனை மையத்தில் ஒருவருக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவு வருவதற்கு 7 மணி நேரம் ஆகிறது. அதுவரை அவர்கள் அங்கேயே தான் இருக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு உணவு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் பணம் கொடுத்தால், உணவு வாங்கி கொடுக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு பிறகு பரிசோதனைக்கு வருபவர்கள் மறுநாள் மதியம் வரை அங்கேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருகின்ற வாகனங்களில் அதிக கெடுபிடியுடன் சோதனை நடத்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களின் எண்களை எழுதிக்கொண்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. சோதனை சாவடியில் உள்ள அனைவரும் முககவசம் அணிந்து உள்ளனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வாகனங்களில் வரும் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தினர். நேற்று காஷ்மீரில் இருந்து வந்த ஒருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
வசதிகள் இல்லை
வெளிமாநிலங்கள், சென்னையில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அதில் வந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரிசோதனை மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து அங்கிருந்த சிலர் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை மையத்தில் மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரேயொரு மின்விசிறி மட்டும் உள்ளது. மக்கள் ஆங்காங்கே மரத்தின் நிழலிலும், காரிலும் தான் இருக்கிறார்கள். உணவு வசதி சரியாக இல்லை. அங்கே உள்ள உணவகத்தில் இருக்கின்ற உணவை தான் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. அதுவும் கட்டணம் அதிகமாக உள்ளது. கழிப்பறை வசதி இல்லை.
இலவச உணவு
மாலை 6 மணிக்கு பரிசோதனைக்கு சென்ற எங்களுக்கு இரவு 8.30 மணிக்கு தான் பரிசோதனை எடுத்தனர். முடிவு தெரிந்து வெளியே வருவதற்கு மறுநாள் மதியம் 12 மணி ஆகிவிட்டது. அதுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தான் கஷ்டப்பட்டோம். அங்கு அரசு இலவசமாக உணவு வழங்கவும், கழிப்பறை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசோதனை செய்பவர், அவருடைய கையுறையை மாற்றுவதே கிடையாது. 40 பேருக்கு பரிசோதனை எடுத்த பிறகும் கையுறையை மாற்றவில்லை. தொற்று நோய்க்கு பரிசோதனை எடுப்பவர் ஒருவருக்கு சோதனை முடிந்த பிறகு கையுறையை மாற்றவேண்டும். சுகாதாரத்தை அதிகம் பேண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.