தென்மேற்கு பருவமழை தீவிரம்: குமரியில் அணைகள் நிரம்புகின்றன திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-06-06 22:55 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நிரம்பி வருகின்றன.மழையின் காரணமாக மாவட்டத்தில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

தென்மேற்கு பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. நேற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல், மணவாளக்குறிச்சி, தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் வெள்ளம் போல் சென்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

நேற்று காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 966 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் 37.90 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 38.40 அடியாக உயர்ந்தது. இதே போல் பெருஞ்சாணி அணைக்கு 617 கன அடி தண்ணீர் வருவதால், 45.85 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 47.15 அடியானது.

அணைகள் நிரம்புகின்றன

சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளின் மொத்த கொள்ளளவு 18 அடி ஆகும். இரண்டு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், சிற்றார்-1 அணையின் நீர் மட்டம் 13.97 அடியில் இருந்து 14.33 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர் மட்டம் 14.07 அடியில் இருந்து 14.43 அடியாகவும் உயர்ந்து உள்ளது. இதன் மூலம் இரண்டு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

சிற்றாறு அணைகள் நிரம்பி வருவதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

வயல்வெளிகளுக்குள் தண்ணீர்...

மேலும் வள்ளியாறு, பரளியாறு மற்றும் கோதையாறு கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழையாற்று கால்வாயில் தண்ணீர் அதிகளவு செல்வதால் சபரி அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. பழையாற்று கால்வாயில் இருந்து சுசீந்திரம் பெரியகுளத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதுபோல பல இடங்களில் தடுப்பணைகளில் இருந்து மறுகால் பாய்கிறது.

பழையாற்று கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் கரையோரம் உள்ள வயல், தோப்புகளுக்குள்ளும் புகுந்துள்ளது. அதாவது ஒழுகினசேரி சுடுகாட்டை தாண்டியுள்ள மதுக்கடை அருகே வயல்வெளிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த வயலில் தற்போது நாற்று நடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வயலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகள் இடிந்தன

மழையின் காரணமாக தக்கலை அருகே திக்கணங்கோடு அம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மோகன், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் காயமின்றி தப்பினார்கள். இதே போல் மாவட்டத்தில் தோவாளை, திருவட்டார் தாலுகாக்களில் தலா 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளன. இதே போல நேற்று காலை நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் ஒரு ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதற்குமுன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளர் ஆறுமுகம் எழுந்து வெளியே சென்றதால் காயமின்றி தப்பினார். இதன் மூலம் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் பல இடங்களில் மழை பெய்யும்போது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும், கிளைகள் முறிந்து சாலையில் விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் மகாராஜா அவிட்டம் திருநாள் நினைவு மைதானத்தில் 2 மரங்கள் நேற்று வேரோடு சாய்ந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குளச்சல்

குளச்சலில் நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் அருகே பல ஏக்கர் பரப்புள்ள வெள்ளியாகுளமும் நிரம்பியது. வெள்ளியாகுளத்தில் கடந்த பல நாட்களாக ஆகாய தாமரை வளர்ந்து, பாசிகள் படர்ந்து இருந்த நிலையில் மழை நீர் குளத்தில் பாய்ந்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து பாசிகளும் சாலை மட்டத்திற்கு உள்ளது. அதை பார்க்கும் போது பெரிய மேய்ச்சல் நிலம் போல் காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் உள்ள பாசிகளை அகற்றி, தெற்கு பகுதியில் உள்ள 2 ஷட்டர்களையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குளப்பாடு குளத்தின் அடைமடையில் அடைப்பு ஏற்பட்டதால், மழை நீர் வெள்ளியாகுளத்தில் பாய்ந்தோட முடியாமல் அருகில் உள்ள தென்னந் தோப்புகளை சூழ்ந்தது. இந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள், பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு, தக்கலை பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சதீசுக்கு தகவல் தெரிவித்தார். அவரும் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மடை அடைப்பு அகற்றப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

செம்பொன்விளை அருகே பறையன்கோட்டை நெல்லிவிளையில் கொத்தனார் தங்கராஜ் என்பவரின் வீட்டின் பின் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் கோழிக்கூடு இடிந்து விழுந்தது. இதில் 7 கோழிகள் பரிதாபமாக இறந்தன. குளச்சல் கடல் பகுதியில் மழையுடன் காற்றும் வீசியதால் கட்டுமர மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் குளச்சலில் மீன்வரத்து வெகுவாக குறைந்தது.

மேலும் செய்திகள்