புழல் சிறையில் இருந்து தவறுதலாக 2 கைதிகளை விடுவித்த ஜெயிலர் பணியிடை நீக்கம் - சிறைத்துறை இயக்குனர் நடவடிக்கை

புழல் சிறையில் இருந்து தவறுதலாக 2 கைதிகளை விடுவித்த ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

Update: 2020-06-06 22:55 GMT
செங்குன்றம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தபோது புழல் சிறையில் 700க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 150க்கும் மேற்பட்ட கைதிகளும் இருந்தனர்.சிறையில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சிறு சிறு குற்றங்களை செய்து விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் 600க்கும் மேற்பட்டோரை தமிழக அரசு, நீதிமன்றம் மூலமாக ஜாமீன் கிடைக்கப்பெற்று விடுதலை செய்தது.

இதில் புழல் சிறையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசிவா(வயது 35), வந்தல முரளி(38) ஆகிய 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இவர்களை ஜெயிலர் குணசேகரன், தவறுதலாக சிறு சிறு குற்றங்களை செய்தவர்களுடன் சேர்த்து விடுதலை செய்துவிட்டார்.

அதன்பிறகு நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட 2 கைதிகளையும் மீண்டும் பிடித்து வர சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மே மாதம் 9ந்தேதி சிறை போலீசார் ஆந்திராவுக்கு சென்று அந்த 2 பேரையும் பிடித்து வந்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

இதில் கவனக்குறைவாக 2 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட ஜெயிலர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார் சிங் நேற்று உத்தரவிட்டார். அதன்படி ஜெயிலர் குணசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்