நெல்லை, தூத்துக்குடியில் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா - தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி

நெல்லை, தூத்துக்குடியில் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட மேலும் 16 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-06 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மேலும் 14 பேரை கொரோனா தாக்கி உள்ளது. இதில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் தென்திருப்பேரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதேபோன்று காயல்பட்டினத்தை சேர்ந்த 2 பேரும், கோவில்பட்டி, செய்துங்கநல்லூர், நாலாட்டின்புதூர், முத்தையாபுரம், தூத்துக்குடி, கிட்டம்பட்டி, ஈராச்சியை சேர்ந்த தலா ஒருவருக்கும், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஏரல் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதும், நெல்லையில் உள்ள வீட்டில் இருந்த அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் அவருடன் ஏரல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 40 போலீசாருக்கு சுகாதார துறை சார்பில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் கல்யாணராம், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் கற்பகம், ஏரல் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுந்தரவேலு மற்றும் பணியாளர்கள் ஏரல் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்தனர்.

ஏரல் தாசில்தார் அற்புதமணி, வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அனிதா ஆகியோர் ஏரல் பகுதியில் சுகாதார பணிகளை துரிதப்படுத்தினர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து 14 நாட்களுக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சென்னையில் பாதிக்கப்பட்டவராக கருதப்பட்டு, அங்கு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் ஒருவர் பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்தவர். இவர் சென்னை போலீஸ் இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் நெல்லை பழையபேட்டை பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி. இவர் தனது கணவர் மற்றும் 4 வயது குழந்தையுடன் சென்னையில் இருந்து காரில் நெல்லைக்கு வந்தார். இவருக்கு கங்கைகொண்டானில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமில் நடந்த சோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 328 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 55 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்த 2 பேருக்கு, தென்காசி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி கொரோனா பரிசோதனை முகாமில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 85 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்