திருவாடானை அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி போதைபொருள் பறிமுதல் சிங்கப்பல், மான் கொம்புகளும் சிக்கின
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் மற்றும் சிங்க பற்கள், மான் கொம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படையினர் கடந்த மாதம் 20-ந்தேதி தொண்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் படகில் இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் வைத்திருந்த போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக அப்துல்ரகீம் (வயது 49), பத்மாவதி(58) உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள், 1½ டன் எடையுள்ள செம்மர கட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஆட்டோ, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு பின்னர் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மேலும் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இலங்கைக்கு கடத்த பதுக்கல்
அதாவது, மேற்கண்ட கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சிலர் கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கமுனியசாமி, ஜேசுதாஸ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திருவாடானை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக போதை பவுடர்கள் மற்றும் 2 மான் கொம்புகள், 2 சிங்கப்பற்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சூப்பிரண்டு பேட்டி
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-
தற்போது ரூ.2 கோடி மதிப்பிலான பிரவுன் சுகர், கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பிடிபட்டுள்ளன. இந்த போதை பொருட்களை ஆப்கானிஸ்தான் நாட்டின் பஸ்தோ மொழியில் போதை பொருள் அபாயம், 2020 தயாரிப்பு என்று அச்சடிக்கப்பட்ட பையில் வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும், கடல்வழியாக இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக தயார் நிலையில் வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.
பரபரப்பு
இதில் தொடர்புடையவர்களை பிடிக்க வேண்டி உள்ளதால் அவர்கள் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். ஏற்கனவே போதை பொருள் பிடிபட்ட வழக்கு நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால், தற்போது சிக்கிய போதை பொருட்களும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அந்த பிரிவினர் இதனை பரிசோதனை செய்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்வார்கள். கைப்பற்றப்பட்டுள்ள சிங்க பற்கள் மற்றும் மான்கொம்புகள் ஆகியவை வனத்துறையினரின் ஆய்வுக்கு பின்னர் அதன் உண்மை தன்மை தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.