வழிபாட்டு தலங்களை திறக்கும்போது கடைபிடிக்கப்படும் வழிமுறையை தெரிவிக்க கோரி வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
வழிபாட்டு தலங்களை திறக்கும்போது கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை தெரிவிக்க கோரியது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் தலைக்கட்டுபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எந்த வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்படவில்லை. வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டால் பூஜைகள், அன்னதானம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வழக்கம்போல நடைபெறும்.
வழிகாட்டுதல்
இந்த சூழ்நிலையில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை என்றால் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவும். எனவே கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளுக்கு உள்ளே செல்பவர்கள் முக கவசம், கையுறைகள் உள்ளிட்டவற்றை அணிவதையும், கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி வழங்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.