ஆரல்வாய்மொழியில் பள்ளி மாணவி தற்கொலை செல்போன் வாங்கி தராததால் விபரீத முடிவு
ஆரல்வாய்மொழியில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால், பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால், பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பள்ளி மாணவி
ஆரல்வாய்மொழி அழகிய நகரை சேர்ந்தவர் சுரேஷ், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகள் கவுசல்யா (வயது 15). இவர் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். 9-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றாள்.
அதைத்தொடர்ந்து கவுசல்யா பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டு வந்தாள். அதற்கு பெற்றோர், நன்றாக படி, பின்னர் வாங்கி தருகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கவுசல்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டாள்.
தற்கொலை
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது கவுசல்யா, செடிக்கு அடிக்கும் மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தாள். அப்போது அங்கு வந்த பெற்றோர், மகள் விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கவுசல்யாவை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு கவுசல்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக கவுசல்யா இறந்தாள். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவி தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.