நாகர்கோவில்- நெல்லை இடையே இடைநில்லா பஸ்கள் இயக்கம் 2 மாதங்களுக்கு பிறகு பயணிகள் உற்சாகம்

2 மாதங்களுக்கு பிறகு நாகர்கோவில்- நெல்லை இடையே இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2020-06-06 01:35 GMT
நாகர்கோவில், 

2 மாதங்களுக்கு பிறகு நாகர்கோவில்- நெல்லை இடையே இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

என்ட் டூ என்ட் பஸ்கள்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதியில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது. நெல்லை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதற்காக பயணிகள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் முதல் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்படுகிறது. முதலில் நெல்லைக்கு 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. மறுநாளில் இருந்து 12 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து நெல்லைக்கு நேற்று முதல் இடைநில்லா பஸ்கள் (என்ட் டூ என்ட்) இயக்கப்பட்டன. முதல் கட்டமாக 6 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோக 19 சாதாரண பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.

பயணிகள் உற்சாகம்

இதனால் கடந்த 2 நாட்களாக இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்த பயணிகள் பலரும் நேற்று சமூக இடைவெளியுடனும், நெரிசலின்றியும் பஸ்சில் பயணம் செய்தனர். இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

அதோடு பயணிகளுக்கு இது வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. பஸ்சில் பயணம் செய்வோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை மட்டும் சோதிக்கப்பட்டு பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சோதனை சாவடிகளிலும் பயணிகளை காத்திருக்க வைக்கவில்லை. இதனால் பயண நேரம் கணிசமாக குறைந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது 294 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் போது அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்