நகர்ப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

கர்நாடகத்தில் நகர்ப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-06-06 00:47 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசின் நகர வளர்ச்சித்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசின் பங்கு தொகை ரூ.209 கோடியை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசு தனது பங்கு தொகையை விடுவிக்கும். நகர்ப்புறங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.47.24 கோடி கையிருப்பு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை 12 நகரங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் 23 நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நகர்ப்புறங்களில் எக்காரணம் கொண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. மக்கள் குடிநீருக்காக அலைமோதும் நிலை எழக்கூடாது. இதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பங்கு தொகை வருவதற்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் பணியில் நகர உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி நாராயணகவுடா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங், முதன்மை செயலாளர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்