குன்னூரில் அனுமதியில்லாத 18 கடைகள் அகற்றம்
குன்னூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 18 கடைகளை அகற்றி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்,
குன்னூரில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து மார்க்கெட்டில் இருந்த சில கடைகள் தந்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் பகுதிக்கு அருகில் உள்ள இடத்துக்கு மாற்றப்பட்டன. இந்த கடைகளுக்கு(அமர்வு கடைகள்) ரூ.30 முதல் ரூ.50 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. காலப்போக்கில் அந்த கடைகளை நிரந்தர கடைகளாக வியாபாரிகள் மாற்றம் செய்தனர். இதற்கு நகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. மேலும் வாடகை செலுத்தவில்லை. இதற்கிடையில் குன்னூர் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட் கடைகளை கணக்கெடுத்தது. அப்போது 18 அமர்வு கடைகள், நிரந்தர கடைகளாக அனுமதியின்றி மாற்றப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தந்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் பகுதிக்கு அருகில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 18 கடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த 11 ஆண்டுகளாக கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். திடீரென கடைகள் அகற்றப்பட்டதால், அதிர்ச்சியில் உள்ளோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர்.