பேரூர் படித்துறையில் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம் கட்ட பூமி பூஜை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவையை அடுத்த பேரூர் படித்துறையில் சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டப கட்டிடத்துக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Update: 2020-06-05 22:08 GMT

பேரூர்,

கோவையை அடுத்த பேரூர் படித்துறைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து மறைந்த தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் அங்கு அதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து பேரூர் படித்துறையில் புதிதாக சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம் கட்டித்தர கோவை நல்லறம் அறக்கட்டளையினர் முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து இதற்கான பூமி பூஜை நேற்றுக்காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடந்தன.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மாவட்ட கலெக் டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரிவாசு மற்றும் நல்லறம் அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.பி.செந்தில்குமார், தொழில் அதிபர்கள் வனிதா மோகன், ரூட்ஸ் ராமசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன், லட்சுமி நாராயணசாமி, நந்தகுமார், மகா கணபதி ஜுவல்லர்ஸ் சுரேஷ், மற்றும் அறங்காவலர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடமை

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேரூர் படித்துறையில் புதிய சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டப கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் கூறியதாவது:-

முன்னோரை வழிபடுவது இந்து தர்மத்தின் மிகப்பெரிய கடமையாக கருதப்படுகிறது. பல வழிபாடு முறைகளை கொண்டு நீத்தாருக்கு கடமைகளை பேரூர் நொய்யல் நதிக்கரை படித்துறையில் ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்து வருகிறார்கள். மக்கள் தொகை அதிகமானதாலும் முறையான பராமரிப்பு அடிப்படை வசதிகள் இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை

குப்பைகளை ஆங்காங்கே போடுவது. சுத்தமில்லாத நீர், குளிக்க வசதி இல்லாதது, சுகாதாரமில்லாமல் இருப்பது, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய போதுமான மண்டப வசதிகள் இல்லாமல் இருப்பது வாகன பார்க்கிங் வசதி இல்லாதது, மழைக்கால சகதி, கூட்டம் அதிகமாவதால் சிரமங்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த பிரச்சினைகளால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு முன்னோர் வழிபாடு மேற்கொள்ள பலரும் வெகுதூரம் சென்று சடங்குகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவை நல்லறம் அறக்கட்டளை கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புதிதாக சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டப கட்டிடம் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. புதிய கட்டிடத்தில் கிரானைட் தரை, வாகன பார்க்கிங் வசதி, தர்ப்பண மண்டபங்கள், காத்திருப்பு மண்டபம், போலீஸ் பூத், சுத்தமான கழிப்பறைகள், குளிக்க தனி இடம், மொட்டை போட தனி இடம், எப்போதும் படித்துறையில் தண்ணீர் இருக்கும் வகையில் நடவடிக்கை, பூஜை பொருட்கள் விற்பனை நிலையம் போன்ற பல வசதிகள் செய்து தரப்படும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் மக்கள் தங்கள் பங்களிப்பை நல்லறம் அறக்கட்டளைக்கு அனுப்பலாம். இதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்