ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்டு வர வேண்டும் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கொரோனா ஊரடங்கால் ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்டு வர வேண்டும் என சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
நாகர்கோவில்,
கொரோனா ஊரடங்கால் ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்டு வர வேண்டும் என சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
675 மீனவர்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 675 மீனவர்கள் ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வரமுடியாமல், எந்த வித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். எனவே, அந்த மீனவர்களை மீட்டு வர மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் ரீ சர்வே பட்டா மாறுதல் பணிகள் நடந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் வெளியே செல்லாததால் தங்கள் பட்டா மாறுதலில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர். எனவே, பொதுமக்களுக்கு பட்டா மாறுதலுக்காக மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.
கடன் வசூல்
குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ஏழைகள் சுய உதவி குழுக்கள் மூலம் பல நிதி நிறுவனங்களில் இருந்த கடன் பெற்றுள்ளனர். தற்போது மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை கடன் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், சில நிதி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளாமல் ஏழை மக்களிடம் இருந்து கட்டாயமாக கடனை வசூலித்து வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் கட்டாய கடன் வசூலை தடுத்து நிறுத்தி, கடனை கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
கருணாநிதி பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் மாநகர 40-வது வட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு வட்ட செயலாளர் விமல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். ஆசாரிபள்ளத்தில் உள்ள 300 ஏழைகளுக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. அரிசி, காய்கறிகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.