கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-05 04:49 GMT
புதுக்கோட்டை, 

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் 70 நாட்களுக்கும் மேலாக விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்திற்கான நிவாரண தொகையாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், தாசில்தாரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதுஅலிஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் சங்கர் பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர் ஜியாவுதீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி, கறம்பக்குடி

இதேபோல் பொன்னமராவதியில் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம்.சாத்தையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பகுருதீன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டு, உணவு பொருட்களை முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஏழை மக்கள் வாங்கிய கடன்களை நிபந்தனை இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாசில்தார் திருநாவுக்கரசை சந்தித்து மனு அளித்தனர்.

கறம்பக்குடி ஒன்றிய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் இளமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சக்திவடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரெத்தினவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்